விழுப்புரம்: பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழகம் முழுவதும் அக்.21-ம் தேதி 600 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனில், 5 ஏக்கருக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு கூடுதலாக இருப்பவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படு என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது.
வாக்குறுதியை முதல்வர் விஜய் நிறைவேற்றவில்லை. ஒன்பது அமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
3 முறை பயிர்க் கடன் அறிவிப்பு செய்தும், கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன் பெற்றுள்ள 23 லட்சம் விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக தவெக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
எனவே, இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகா சபை ஆகிய 3 விவசாயிகள் சங்கம் இணைந்து முதல்வர் விஜய் அரசாங்கம், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, வரும் 21-ம் தேதி, தமிழகத்தில் 600 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் சாகுபடி குறைந்து, விளை பொருள் உற்பத்தி பாதித்துள்ளது. 25 கிலோ அரசி மூட்டை ரூ.400 வரை கடுமையாக உயர்ந்துள்ளது. வருவாய் துறை ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
மேட்டூர் அணையை 100 அடி எட்டிய பிறகு அணையை திறக்க வேண்டும், செப்டம்பர் 1-ம் தேதிக்கு மாற்றாக, செப்டம்பர் 3-வது வாரத்தில் தண்ணீரை திறக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.
3-வது வாரத்தில் தண்ணீரை திறந்தால்தான், ஒரு போகம் சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியும்.
இந்தக் காலக்கட்டத்தில் வட கிழக்கு பருவ மழையும் தொடங்கிவிடும், ஓரளவு சமாளிக்கலாம் என்றோம். ஆனால், தவெக அரசு செவி சாய்க்க மறுத்துவிட்டு, சாலையில் தடுப்புகளை அமைக்க ரூ.5 கோடி செலவு செய்து, மேட்டூர் அணையை முதல்வர் விஜய், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி திறந்துவைத்தார்.
ஆனால், தற்போதைய நிலை, அணையில் 59 அடிக்குதான் தண்ணீர் உள்ளது. அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை மூடப்படும். தண்ணீர் இல்லையென்றால், சம்பா பயிரை விவசாயிகளால் பாதுகாக்க முடியாது.
உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்து மாத வாரியாக தமிழகத்துக்கு பெற வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு தவெக அரசு முயற்சி செய்யவில்லை.
அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஆனால், தவெக அரசு அலட்சியமாக செயல்படுகிறது. புதிய கடன் அறிவிப்பை அரசாங்கம் தெரிவத்துள்ளது. பயிர்க் கடன் நிலுவையில் இருக்கும்போது, புதிய பயிர்க் கடனை பெற முடியாது.
பாஜக அரசின் மின்சார திருத்த மசோதாவை அமல்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தவெக அரசு டெண்டர் கோரியிருக்கிறது. இது விவசாய விரோத செயல். 24 லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் பாஜக அரசுக்கு தவெக அரசு துணை போகக் கூடாது.
தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். அவர், எந்த கடைக்கும் சென்று அரிசி வாங்கவில்லை. அரிசி விலையை விசாரித்து இருக்கலாம்.
முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கக்கூடிய வகையில் அரிசி விலை உயரவில்லை என அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அரிசி ஆலைகளில் ஆயிரக்கணக்கான மூட்டைகளை பதுக்கி வைத்து வியாபாரிகள், இடைத்தரகர்கள் லாபம் பார்க்கின்றனர். அரசாங்கம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக ஆட்சியின் 3 மாதத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது” என்று அவர் கூறினார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.