கரூர் வெண்ணெய்மலையில் போராட்டம் நடத்தியவர்கள்

 
தமிழகம்

கரூர் வெண்ணெய்மலை அருகே போராட்டம்: ஜோதிமணி எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் உள்பட 300 பேர் கைது

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இனாம் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் இனாம் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடைகள், வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத் துறையினர் சீல் வைத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்கள், நவ.10ம் தேதி முதல் சின்னவடுகப்பட்டி சாலையில் உள்ள கண்ணம்மாள் வீட்டில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கண்ணம்மாள் வாடகைக்கு விட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணம்மாள் உட்பட அவர் குடும்பத்தினர் 4 பேர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 4 பேரையும் கைது செய்தனர்.

சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக கரூர் எம்.பி. ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ம.சின்னசாமி, பாமக (அன்புமணி) கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நா.பிரேம்நாத் உள்ளிட்டோர் வடுகப்பட்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 23 வீடுகளுக்கு, கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஷ் தங்கையா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாவல் நகரில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தமாக, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT