கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அகிலனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
கோவை: கோவையில் பள்ளி மாணவர் தற்கொலை வழக்கில், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்த மாணவர் அகிலன் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சாதிய கண்ணோட்டத்தி்ல் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் அணுகியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாணவரின் தாய் கெளசல்யாதேவி அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் மற்றும் 2 மாணவர்கள் மீது பீளமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டதாக முதலில் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்பதே அறிந்த அகிலனின் குடும்பத்தினர், உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், அதுவரை அகிலனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் உறுதிமொழியை ஏற்று மாலையில் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, 16 வயதுடைய சக மாணவர்கள் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகத்தினர் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.