சென்னை: மாநகராட்சியில் 6 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய ரூ.847 கோடி சொத்து வரி நிலுவையை செப்.30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தும் 14,15,771 சொத்து உரிமையாளர்களில் இதுவரை 8,12,539 பேர் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள 6,03,232 பேர் சொத்து வரி நிலுவை மற்றும் நடப்புத் தொகையாக ரூ. 847.80 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023, விதி, 268 (1)(a)-ல் சொத்து உரிமையாளர்கள், ஒவ்வொரு அரையாண்டுக்கான தங்கள் சொத்து வரியை அந்தந்த அரையாண்டின் இறுதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், விதி 3-ன்படி, நிலுவையில் உள்ள சொத்துவரி மீது அடுத்துவரும் அரையாண்டு முதல் தனிவட்டி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சொத்து உரிமையாளர்கள் தாங்கள் செலுத்து வேண்டிய நடப்பு மற்றும் நிலுவையில் உள்ள சொத்து வரியை செப்.30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
சொத்து வரியை www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, 94451 61913 என்ற வாட்ஸ்-அப் எண், சொத்து வரி ரசீதுகளில் உள்ள கியூஆர் கோடு மூலமாக செலுத்தலாம். மேலும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் நேரடியாகவும் செலுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.