பர்கூரில் இருந்த பழைய ரயில் நிலையம். (கோப்பு படம்)
கிருஷ்ணகிரி: திருப்பத்தூர்-ஓசூர் இடையே 109 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க ரூ.3,911 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1905-ல் திருப்பத்தூரிலிருந்து பர்கூர் மார்க்கமாக கிருஷ்ணகிரி வரை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு, 1936 வரை ரயில்கள் இயக்கப்பட்டன. போதிய வருவாய் இல்லை என்பதால் 1942-ல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை அமைத்து, ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்திருப்பதாக, கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற அரசு அலுவலர்கள், தொழில்முனைவோர் கலந்து கொண்ட கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ரூ.3,910.68 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, வரைபடத்துடன் கூடிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரிலிருந்து ஓசூர் வரை 109.24 கி.மீ. தொலைவுக்கு ரயில் வழித்தடம் அமைத்து, இப்பாதையில் 130 கி.மீ. வேகம் வரை ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி, சின்னார், சூளகிரி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 64.435 ஏக்கர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 335.69 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணி தொடங்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.