படம்: எல்.பாலச்சந்தர்
பிரதமர் மோடி பாராட்டிய சிவகங்கையில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடங்கியதால், அங்குள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வீணாகி வருகின்றன.
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஊராட்சித் தலைவர் மணிமுத்து ஆகியோர் முயற்சியால் 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் நாளொன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கு தேவையான காய் கறி, கோழி, மீன் ஆகிய உணவுக் கழிவுகளை காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் சேகரித்து வந்தனர். பின்னர், அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றினர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறியது.
அதன் மூலம், ஜெனரேட்டரை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரித்தனர். இதில் கிடைக்கும் மின்சாரத்தை காஞ்சிரங்காலில் உள்ள தெரு விளக்குகள், 4 பேட்டரி வாகனங்கள், அங்குள்ள மின் மோட்டார் போன்றவைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால், ஊராட்சிக்கு பல ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் குறைந்தது. மேலும், 3 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது.
இதையறிந்த பிரதமர் மோடி, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இத்திட்டத்தை பாராட்டினார். இந்த அமைப்பை ஏற் படுத்திய தனியார் நிறு வனமே 2023-ம் ஆண்டு வரை பராமரித்து வந்தது. அதன் பின்னர், ஊராட்சி நிர்வாகமே மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
6 மாதங்களுக்கு முன்பு இயந்திரம் பழுதடைந்ததால் திட்டம் முடங்கியது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வீணாகி வருகின்றன. பிரதமர் மோடி பாராட்டிய இத்திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலி யுறுத்தினர்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை ஏற்படுத்திய தனியார் நிறுவனம்தான் இயந்திரத்தை பழுது நீக்க முடியும். அந்நிறுவனத்துடன் பேசி வருகிறோம். விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்' என்றனர்.