திருச்சி: தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்கடல் சென்ற தாழ்வுப் பகுதியும், காற்று சுழற்சியும் ஒன்றிணைந்து லட்சத்தீவுக்கு தெற்குப் பகுதியில் நீடிக்கிறது.
புதிதாக குமரிக்கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரணமாக தற்போது டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிந்துவருகிறது.
அரபிக்கடல் தாழ்வு சுழற்சி கிழக்கு காற்றை ஈர்ப்பதன் காரணமாக வால்பாறை முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு உண்டு. இதேநிலை வரும் 8-ம் தேதி வரை தொடரும்.
மலேசியா, தாய்லாந்து கடந்து வங்கக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் தாழ்வு நிலை வரும் 9 முதல் 14-ம் தேதி வரை இலங்கை, குமரிக்கடல், தென் தமிழகம் வழியாக அரபிக்கடல் நோக்கி நகர்ந்து, செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை கொடுக்கும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.