பல்வீர் சிங் | கோப்பு படம்

 
தமிழகம்

கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

கி.மகாராஜன்

மதுரை: விசாரணைக் கைதிகளின் பற்களை உடைத்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அம்பை டிஎஸ்பியாக பணிபுரிந்த போது அருண்குமார் என்பவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து பல்லை உடைத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிட்டு என் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில், விசாரணை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஷமிம் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாண்டார். ரவுடிகளின் செயல்பாடுகளை ஒழித்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் மனுதாரர் மீது சட்டவிரோத செயல்களை செய்பவர்கள் புகார் அளித்துள்ளனர். ஊடக அழுத்தம் காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் புதிதாக சேர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு தமிழ் முழுமையாக தெரியாது. குற்றப்பத்திரிகை தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார் எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், மனுதாரர் விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியுள்ளார். மனுதாரர் பணியில் சேர்வதற்கு முன்பு தமிழக அரசு நடத்திய தமிழ்மொழி தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது இந்த விவகாரம் குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்படவில்லை. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதி, தமிழ் மொழியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வேறு மாநில ஐஏஎஸ் அதிகாரி, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வாய்ப்பில்லை. சாப்பிட்டீங்களா, உட்காருங்க என்ற தமிழ் வார்த்தைகளை பேசினால், அவரை தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர் எனக்கூற முடியுமா? எனக்கும் அதே நிலை தான்.

மனுதாரர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை. விசாரணை நீதிமன்றம் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் ஐபிஎஸ் அதிகாரி மீது இயந்திரத்தனமாக செயல்பட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. ஊடக அழுத்தம் மற்றும் பிற அழுத்தங்களால் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மனுதாரர் மீது அம்பை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜன.27-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT