தமிழகம்

வாக்குச்சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் சிறை தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், செல்பி, வீடியோ எடுத்தால் 3 மாத சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது படம்பிடிப்பது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 128-ன்படி கடும் குற்றமாகும். எனவே, வாக்குச்சாவடிக்குள் செல்போன், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மீறி, டிஜிட்டல் சாதனங்களை உள்ளே கொண்டு சென்று, வாக்குச்சாவடியில் புகைப்படம், செல்பி, வீடியோ எடுத்தால் 3 மாதம் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

எதிர்காலத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்களிப்பதன் ரகசியத்தைக் காப்பது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரல் மை யுடன் செல்பி எடுக்க விரும்புவோர் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT