திருப்பரங்குன்றம் கொடி மரம் முன் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி | படம் : நா. தங்கரத்தினம்

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

கார்த்திகை தீபம் ‘சர்ச்சை’களுக்குப் பிறகு சென்றதால் பரபரப்பு

நா.தங்கரத்தினம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை வழிப்பட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மிகவும் பிரசித்திப்பெற்ற ஆன்மீக ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோயிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உட்பட பலர் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

          

இந்த மனு கார்த்திகை நாளுக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தபோது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று மனுதாரர்களே தீபம் ஏற்றலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்களை 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இம்பீச்மென்ட் தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகரிடம் மனு அளித்தன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்களும், பாஜக எம்பிக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மதுரை அவுட்போஸ்ட் அருகே பெரியார் சிலை முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாரியது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் தான். ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை நாளில் அந்த தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் விரைவில் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்புக்கு இடையேயும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பிரதமர் மோடி, இன்று மாலை 4.10 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாலைமார்க்கமாகச் சென்றார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயில், மலைப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட போலீஸார், 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோயில் முன் காரில் நின்றபடியே பிரமதர் மோடி, 150 மீ தொலைவில் பெரிய தேர் வீதியில் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்தும், வணங்கியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

படம் : நா. தங்கரத்தினம்

பொதுமக்கள், மோடி வாழ்க, என்று முழக்கங்களும், ஆரவாரமும் செய்தனர். கோயில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கோயில் மண்டபத்தில் நுழைந்தவுடன் அச்சகர்கள், பூரண கும்ப மரியாதை வழங்கினர். அதன்பிறகு மேளதாளங்கள் முழங்க, பிரதமர் மண்டபத்தில் இருந்து கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

குடவரை கோயில் பிரகாரத்தை சுற்றிச் சென்ற பிரதமர் மோடி, மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நின்றபடி சிறிது நேரம் உருக்கமாக வழிப்பட்டார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு முன் சாஷ்சடங்கமாக தரையில் விழுந்து முருகனை மனமுருகி வழிப்பட்டார்.

அர்ச்சகர்கள், பிரசாதம் வழங்கி முருகன் படம் வழங்கினார். 4.30 மணியளவில் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் இருந்து ஏர்போர்ட் மண்டலே நகரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 2024 மக்களவைத்தேர்தல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில் இதுபோல் பொதுக்கூட்டத்திற்கு மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருந்தார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள கடைகள் பாதுகாப்பு கருதி நேற்று மதியத்திற்கு பிறகு அடைக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு பிரமர் மோடி சுவாமி தரிசனம் முடிந்து சென்றபின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT