படம் எம். சாம்ராஜ்
புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புடன் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இருபுறமும் கட்சியினர், மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2, லஜக 2 என 30 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டு, பிரச்சாரமும் உடனடியாக தொடங்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் கடந்த 30-ம் தேதி எனது வாக்குச் சாவடி, வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பின் கீழ் கடந்த 30-ம் தேதி தொண்டர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜ சார்பில் நடந்த ரோடு ஷோ வில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை வழியாக ரோடு ஷோ தொடங்கும் அஜந்தா சந்திப்புக்கு பிரதமர் வந்தார். அங்கு 4.30 மணிக்கு ரோடு ஷோ தொடங்கியது. ரோடு ஷோ வாகனத்தில் பிரதமரின் ஒருபக்கத்தில் முதல்வர் ரங்கசாமி, மறுபக்கம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பின்னே பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர். அண்ணா சாலை வழியாக என்டிஏ வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி கை அசைத்தபடி வாகனத்தில் வந்தார்.
வழி நெடுகிலும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை துாவி, "பாரத் மாதா கீ ஜே" என கோஷம் எழுப்பியபடி அவரை வரவேற்றனர். 5.10 மணிக்கு நேருவீதி சந்திப்பில் ரோடு ஷோ நிறைவடைந்தது. சுமார் ஒரு கி.மீ நடந்த ஷோவையொட்டி அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதி வரை அண்ணா சாலை விழாகோலம் பூண்டது. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜவினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாடிகளில் இருந்து மலர் துாவினர். ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அந்த கலைஞர்களுக்கு பிரதமர் வணக்கம் தெரிவித்தார்.
மத்திய - மாநில நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளும் ஆங்காங்கே பிரதமரை வரவேற்று நன்றி தெரிவித்தனர். தாங்கள் பயனடந்த மத்திய அரசின் எண்களை அவர்கள் பேனர்களாக பிடித்து காண்பித்தனர்.
ரோடு ஷோவின்போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். ரோடு ஷோ முழுக்க மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாகனத்தை பின்தொடர்ந்து நடந்தே வந்தார்.
திரும்பவும் ‘ரோடு ஷோ’ வாகனத்தில் புறப்பட்ட முதல்வர்:
ரோடு ஷோ நிறைவடைந்த காமராஜர் சிலை பகுதியில் சாலையில் துணியால் தடுப்பும், ஓய்வறையும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் வந்த ரோடு ஷோ வேன் அங்கு வந்து நின்றவுடன் முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் கைகுலுக்கி தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். முதலில் அவரை இறங்க சொல்லி பிறகு மோடி இறங்கினார்.
பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு பிரதமர் காரில் புறப்பட்டார். அங்கு முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் நின்றனர். நெடுநேரமாகியும் தனது கார் வராததால் ரோடு ஷோ வாகனமும் அஜந்தா சிக்னல் நோக்கி செல்ல திரும்பியது. இதையடுத்து முதல்வர், மத்திய அமைச்சர், அமைச்சர், மாநிலத்தலைவர் ஆகியோர் வாகனத்தில் ஏறி சென்றனர்.
இருபுறமும் நின்ற மக்கள், கட்சியினர் கை அசைக்க அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்தபடி தனது கார் நோக்கிச் சென்றார். பின்னர் விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் வழியனுப்பி வைத்தார். அதன்பின்னர் பிரதமர் மோடி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.