திருச்சி விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

 
தமிழகம்

திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

மோகன் கணபதி

திருச்சி: கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டும் பிரதமர், அடுத்ததாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

          

அரசு நிகழ்ச்சியில் பிரதமர்:

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, மசகு எண்ணெய் உற்பத்தி, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்.

பெட்ரோலியத் துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

இந்தத் திட்டம் 8.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும். மேலும், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயுவை வழங்கும். அதோடு, 200க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவும்.

சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ. 1,490 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT