புதுடெல்லி: ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலரை தாண்டியது. பல நாடுகளிலும் பெட்ரோல் விலை உயர்ந்தது.
இந்நிலையில் எச்பிசிஎல் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏதும் ஏற்படவில்லை. கூடுதல் சரக்கு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தை வலுப்படுத்தும். எனவே, வதந்திகளை தவிர்க்கவும். ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை மட்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல் ரூ.101.89, மும்பையில் ரூ.113.77-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, பிபிசிஎல் ஸ்பீடு, ஐஓசிஎல் எக்ஸ்பி95 ஆகிய ப்ரீமியம் பெட்ரோல் விலையும் சராசரியாக ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.