சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை (சென்னை மெட்ரோ ரயில் திட்டம்) மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமத்தில் பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண் என்ற முறையில் இந்த சம்பவத்தை பேரவையில் பதிவுசெய்கிறேன். இந்த கொடுமைக்கு யார் காரணமோ அவர்களுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விருத்தாசலம் கோயில் தெப்பக்குளத்துக்கு செல்லும் நீர்ப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றி நீர் செல்லும் பாதையை சரிசெய்ய வேண்டும்.
விருத்தாசலத்தில் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்திலேயே போதுமான இடவசதி இருப்பதால் அங்கேயே ஊழியர்களுக்குப் புதிய குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
விருத்தாசலம் பகுதியில் பட்டா, மின் இணைப்பு பெற்று வீடு கட்டி 30 ஆண்டுகளாக வசித்துவரும் மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அவர்களை அப்புறப்படுத்த முயற்சி நடைபெறுகிறது.
பட்டாவும் கொடுத்து மின் இணைப்பும் தந்து அதன்பிறகு திடீரென மக்களை அப்புறப்படுத்தினால் அவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். இதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார்.