ஈரோடு: எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று தேமுதிக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.
மின் கட்டண உயர்வால் நெசவுத் தொழிலை நம்பியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. மக்கள் எங்களிடம் தெரிவிக்கும் குறைகள் குறித்து நாங்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கிறோம். திமுக அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. எஞ்சிய காலத்தில் மற்ற வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஒரு எம்ஜிஆர் தான், ஒரு விஜயகாந்த் தான். இருவருடைய இடத்தையும் வேறு யாரும் நிரப்பமுடியாது. திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் வடமாநிலத்தவர் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் இங்கு பணியாற்றலாம். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது.
அவரவர் சொந்த மாநிலத்தில் தான் வாக்குரிமை இருக்க வேண்டும். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆண்ட கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது.
தேர்தல் முடிவு வெளியாகும்போது கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும், அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும். அதிமுக மாநிலங்களை உறுப்பினர் பதவி தருவதாக கூறி எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் 2025-ம் ஆண்டில் கேட்டோம், அவர்கள் 2026 இல் தருவதாக கூறியுள்ளார்கள்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேமுதிக கூட்டணியை முடிவு செய்யாது. கடந்த 2011-ம் ஆண்டு நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் விரும்பிய கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அவர் காட்டிய வழியில் 2026 தேர்தலில் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.