பிரேமலதா

 
தமிழகம்

தவெக அரசு 100 நாளில் செய்த மாற்றம்தான் என்ன? - பிரேமலதா விமர்சனம்

தமிழினி

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும், போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. மருத்துவர், செவிலியர், உபகரணங்கள் பற்றாக்குறை என அனைத்தையும் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் எலிகள் பிரச்சினை உள்ளது. அதோடு சுகாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரிடரை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இந்த ஆட்சி 100 நாளை கடந்திருக்கிறது, அவ்வளவுதான். மாற்றம் என சொல்லி வந்தார்கள்... என்ன மாற்றம் செய்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கஞ்சா, போதைப்பொருட்கள்தான். இளைஞர்கள்தான் தவெக ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

கர்நாடகாவில் 3 தமிழர்களை கொலை செய்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முதல்வர் விஜய், இது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டமன்றமே இயங்குகிறது. காலங்காலமாக கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருகிறார்கள். இங்கு மக்களுக்காக யாரும் பேசுவதாக தெரியவில்லை. விவசாயிகளின் வாழக்கை கேள்வி குறியாகயா உள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி போல உள்ளது. முழு கடன் தள்ளுபடியை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும்.

போதையினால்தான் ஒரு மனிதன் மிருகம் ஆகிறான். அதனால்தான் சக மாணவரை அடித்துக் கொள்கிறான். இது தடுக்கப்பட வேண்டும். கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT