ஊட்டி அருகே தோடரின மக்களின் வசிப்பிடமான முத்தநாடு மந்தில் உள்ள கோயிலில் வழிபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
ஊட்டி: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் வந்த பிரேமலதா விஜயகாந்த், தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்தார்.
நேற்று ஊட்டிக்கு வந்த அவர் அங்குள்ள சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்று, சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, முத்தநாடுமந்து தோடர் கிராமத்துக்குச் சென்று, தோடர் பழங்குடியின மக்களின் கோயிலைப் பார்வையிட்டார்.
பசுந்தேயிலைக்கு விலை... பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசுந் தேயிலைக்கு சரியான விலை கிடைக்காததால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய தீர்வுகாண வேண்டும். நீலகிரியில் பலருக்கும் பட்டா இல்லை. பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதால் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அந்த தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். விஜயகாந்த் அளவுக்கு, அரசியலில் விஜய் பிரகாசிப்பாரா என்பது குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.