சென்னை: “தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தேமுதிகவும் ஆதரிக்கிறது. கூடவே, மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதன் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தினர். தொடர்ந்து தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையும் ஏற்கப்படுவதாக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்க போவதில்லை. அனைவரும் ஒன்றாகத்தான் இருப்போம். தேமுதிக இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது.
ஆனால், சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் பிரச்சினை, காவிரி நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ்நாடு மக்களின் உரிமையை நாம் ஒவ்வொரு முறையும் சுற்றியுள்ள மாநிலங்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் என அனைவரும் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
தாய்ப்பால் போல் தண்ணீர் முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எனவே, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையைப் பற்றி யோசிக்க வேண்டும்.
தமிழகத்தில் எங்கெல்லாம் நதிகளை இணைக்க முடியுமோ, அதைச் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் தூர்வார வேண்டும். மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.