பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப் படம் 
தமிழகம்

“கூட்டணிக்காக தேமுதிகவை யாரும் மிரட்ட முடியாது” - பிரேமலதா கருத்து

செய்திப்பிரிவு

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. பிப்.20-ம் தேதிக்கு பின்னர் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. உரியநேரத்தில் நல்ல முடிவு எடுத்து, சென்னை தலைமை கழகத்தில் உங்களை அழைத்துநிச்சயமாக அறிவிப்போம். தேமுதிக எதிர்காலத்துக்கு எந்த கூட்டணி நல்லதோ, எங்களது மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ அதன்படி சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுப்பேன்.

          

மதுராந்தகத்தில் நடந்த அதிமுக -பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் வந்துள்ளது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இது விஜயகாந்த் கட்சி. யாரும் யாரையும் மிரட்ட முடியாது. யாரையும் எதற்கும் அடிபணிய வைக்கவும் முடியாது. டி.டி.வி. தினகரன் - பழனிசாமி இணைந்தது தொடர்பான பதிலை அவர்கள் இருவர் சொன்னால்தான் சரியாக இருக்கும். ஜனநாயகன் பட விவகாரம் அரசியலுக்காகவா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது குறித்து விஜய் தான் பதில் கூறவேண்டும். இதுகுறித்த சந்தேகங்களை நீங்கள் விஜய்யிடம் கேட்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக உள்ளேன்.

இந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. இன்னும் நடக்க வேண்டியது நிறைய உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூன்று கட்ட சுற்றுப்பயணங்களை முடித்துள்ளோம். நான்காம் கட்ட சுற்றுப் பயணத்தை தூத்துக்குடியில் இருந்து தொடங்கி வரும் பிப்.3-ம் தேதி நிறைவு செய்கிறேன். தேமுதிக எங்கள் குழந்தை. எங்கள் குழந்தைக்கு எப்போது என்ன நல்லது செய்ய வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்குத் தெரியும். உரிய நேரத்தில் அனைவரும் போற்றும்படி, ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம்.

திமுக-வுடன் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இது போன்ற ஊகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது. என்டிஏ கூட்டணியில் இவ்வளவு கட்சிகள் தான் என்று இன்னும் இறுதியாகவில்லை. அதைப்போல் திமுக கூட்டணியில் இன்னும் இவ்வளவு கட்சிகள் தான் என்பதும் முடிவாகவில்லை. எனவே, எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் மாறலாம். யார் எந்தக்கூட்டணியில் வேண்டுமென்றாலும் சேரலாம். அதேசமயம் தேமுதிக-வை பொறுத்தவரை, நிச்சயமாக தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் விதத்தில் ஆழ்ந்து சிந்தித்து, ஒரு தெளிவான முடிவை எடுப்போம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாக பிரதமர் கூறலாம். எப்படி இருந்தாலும் தேர்தல் முடிந்த பின் ஒரு புதிய ஆட்சி தான் வரும். அந்த ஆட்சி நல்லாட்சியாக, மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு ஆட்சியாக அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் என்றார்.

SCROLL FOR NEXT