தமிழகம்

“ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதாக இபிஎஸ் உறுதியளித்தார்” - கடிதத்தை காட்டி பிரேமலதா ஆவேசம்

வெற்றி மயிலோன்

திருவண்ணாமலை: ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துப் போட்டுக்கொடுத்த கடிதத்தை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஊடகங்களிடம் காண்பித்தார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “எடப்பாடி பழனிசாமி எங்களைப் பார்த்து அரை பர்சன்ட் ஓட்டு என்கிறார். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. உங்கள் கூட தானே 2011 முதல் 2026 வரை இருந்தோம். முதல்வர் வேட்பாளராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசுவது அழகல்ல.

          

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டதை முதன்முறையாக இப்போது அண்ணாமலையார் கோயிலில் உங்களுக்கு காட்டுகிறேன். நான் எங்கே கையெழுத்து போட்டுக் கொடுத்தேன் என்று பழனிசாமி கேட்டார். அரசியலில் கண்ணியத்தை கடைபிடித்து நான் இதுவரை இந்தக் கடிதத்தை வெளிக்காட்டாமல் இருந்தேன். இப்படி வெளிக்காட்டும் சூழ்நிலைக்கு அவர்தான் கொண்டுசென்றார்.

2024ல் தேமுதிகவுக்கு 5 மக்களவை எம்.பி தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் வழங்கப்படும் என்று அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்தார், நானும் கையெழுத்து போட்டேன். எந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்படும் என வருடத்தை போட்டு தருமாறு அவரிடம் அப்போதே சொன்னேன். எம்ஜிஆர் காலம் முதல் இப்படி கொடுப்பதே வழக்கம் என்று சொல்லிவிட்டு, என் வார்த்தைதான் முக்கியம் என்று அவர் சொன்னார். அவரின் வார்த்தையை நாங்கள் நம்பினோம். ஆனால் நம்பிக்கைக்கு புறம்பாக அவர் 2025ல் எங்களுக்கு ராஜ்யசபா கொடுக்காமல் ஏமாற்றினார்.

எங்கள் கட்சியை ‘ஐசியுவில் இருந்த கட்சி’ என்கிறார் பழனிசாமி. அவர் இவ்வாறு பேசுவது தவறு. அண்ணா சொன்னபடி நாங்கள் கண்ணியத்தை கடைபிடிக்கிறோம். ஆனால், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள், நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. பழனிசாமி செய்தது தவறு என்பதை அதிமுகவினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவரின் பேச்சுக்கெல்லாம் மே4-ம் தேதி மக்கள் பதில் சொல்வார்கள்” என்றார்

SCROLL FOR NEXT