தமிழகம்

பிரேமலதா கொடுத்த தொகுதிப் பட்டியல்... திமுக கூட்டணியில் சூடுபிடிக்கும் ரேஸ்!

வே.கோபாலகிருஷ்ணன்

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறது தேமுதிக. இதைத் தொடர்ந்து, தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் அனல் தகிக்கிறது அறிவாலயம்.

இருபது ஆண்டு கால அரசியல் பகையை மறந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முதன்முறையாக திமுகவுடன் கைகோத்திருக்கிறது தேமுதிக. அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரேமலதா, கூட்டணியை முறைப்படி உறுதி செய்தார்.

          

இந்தச் சூழலில்தான், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட தேமுதிக விருப்பம் கொண்டுள்ளது என திமுக தலைமை கேட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளின் பட்டியலை பிரேமலதா வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நகர்வின் பின்னணி குறித்துப் பேசும் தேமுதிக சீனியர் தலைவர்கள் சிலர், “கூட்டணி பேச்சுவார்த்தையின்போது 12 தொகுதிகள் வேண்டும் என பிரேமலதா பிடிவாதம் காட்டினார். அதற்கு ஸ்டாலின், ‘தற்போதைய நிலவரப்படி 6+1 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும். கூட்டணிக் கட்சிகள் யாராவது வெளியேறினால் 8 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

நாங்கள் உங்களுக்கு வெறும் சீட் கொடுக்கவில்லை; வெற்றியையும் சேர்த்து எம்.எல்.ஏ-க்களையே கொடுக்கிறோம். எவ்வளவு சவால்கள் வந்தாலும் உங்கள் வெற்றி உறுதி’ என நம்பிக்கை அளித்தார். மேலும், ‘உங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலைக் கொடுங்கள், நாங்கள் ஆய்வு செய்துவிட்டு இறுதி முடிவைச் சொல்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பிரேமலதா வழங்கிய பட்டியலில், தனது சகோதரர் சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளார். மேலும், தனக்கு ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலம்; விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் அல்லது சாத்தூர்; எல்.வெங்கடேசனுக்கு விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி; பார்த்தசாரதிக்கு விருகம்பாக்கம்; அனகை முருகேசனுக்கு பல்லாவரம்; இளங்கோவனுக்கு பாப்பிரெட்டிப்பட்டி; அழகாபுரம் மோகன்ராஜுக்கு சேலம் தெற்கு என உத்தேசப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து திமுக மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்துவிட்டுப் பதில் சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்” என்றனர் தேமுதிக சீனியர் தலைவர்கள். மறுபுறம், தேமுதிக கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே அந்தத் தொகுதிகளைக் குறிவைத்து காய் நகர்த்தி வந்த திமுக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து ஆதங்கப்படும் திமுக சீனியர்கள், “கடந்த முறை விருத்தாச்சலம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது, அங்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் இரண்டு முறை திமுகவின் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் அதே தொகுதியை எதிர்பார்த்து வேலை செய்து வருகிறார்கள்.

அடுத்ததாக, விருதுநகரில் மூன்றாவது முறையாக திமுக-வின் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் இருக்கிறார். சாத்தூரில் கூட்டணிக் கட்சியான மதிமுக-வின் ரகுராமன் இருக்கிறார். இந்த முறை விருதுநகருக்கு சீனிவாசனும், சாத்தூருக்கு மீண்டும் ரகுராமன் அல்லது மதிமுக முன்னாள் எம்.பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் காய் நகர்த்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் இருக்கும் சூழலில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் அங்கு சீட் எதிர்பார்க்கிறார்.

விக்கிரவாண்டியில் திமுக சார்பில் வென்ற புகழேந்தி மறைவுக்குப் பின் நடந்த இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்; அவரும் மீண்டும் போட்டியிடத் தயாராக உள்ளார். விருகம்பாக்கத்தில் பிரபாகர் ராஜா மீண்டும் சீட் எதிர்பார்க்கும் நிலையில், கே.கே.நகர் தனசேகரன், காசி முத்துமாணிக்கம் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். இதேபோல் பல்லாவரத்தில் இருமுறை வென்ற திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்த டாக்டர் எம்.பிரபு ராஜசேகர் மீண்டும் வாய்ப்பு எதிர்பார்க்கிறார். இதுதவிர தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பனும் ரேஸில் உள்ளார். சேலம் தெற்கில் மூன்றாவது முறையாக அதிமுக வென்றுள்ள நிலையில், கடந்த முறை போட்டியிட்ட திமுக-வின் சரவணன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார்; அதேசமயம் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான பி.கே.பாபுவும் அங்கு முயற்சிக்கிறார்.

இப்படியாக ஏற்கெனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் முட்டி மோதும் தொகுதிகளில்தான் தேமுதிக கால் பதிக்கிறது. எனவே, தேமுதிக கேட்கும் தொகுதிகள் அவர்களுக்குக் கிடைத்தால், அங்கு இவ்வளவு காலம் உழைத்தவர்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். அவர்களுக்கு மாற்றுத் தொகுதி கிடைக்குமா அல்லது தேமுதிகவின் பட்டியல் மாறுமா என்பதுதான் தற்போது அறிவாலயத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது” என்றனர்.

SCROLL FOR NEXT