மதுராந்தகம் நெல்வாய் இணைப்பு சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த நெல்வாய் இணைப்பு சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தவெகவின் தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்ட ரூ.2,500 யாருக்காவது வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசியதாவது: இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வதற்கு எதிர் தரப்பில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் பிரச்சனையை பற்றி மட்டும்தான் உதயநிதி பேசினார். ஆனால், ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் பதவி விலகுவீர்களா என பேசி வருகிறார். இடைத்தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும். பேசுவதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா யோசனை செய்து பேச வேண்டும்.
மதுராந்தகம் மக்கள் துரோகத்துக்கு துணையாக நிற்கமாட்டார்கள். மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்ததற்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, தற்போது மீண்டும் வாக்கு சேகரிக்க தவெக வேட்பாளர்கள் வருகிறார்கள். முதல்வர் விஜய் ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். யாருக்காவது அந்தப் பணம் வந்திருக்கிறதா. இவ்வாறு அவர் பேசினார்.