கோப்புப் படம்
சமீபகாலமாக திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா கேட்டதாகவும், அதை கொடுக்க திமுக முன்வராததால்தான் கூட்டணி ஒப்பந்தத்தின் போதும் பிரேமலதா வரவில்லை என தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதுகுறித்து பிரேமலதா நேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் நேற்று செய்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியதாவது: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தாக்கல் செய்துள்ளார். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டியது.
காலதாமதமாக 2026-ல்தான் சாத்தியமாகியுள்ளது. கடந்த காலங்களில் அதிமுக உள்ளிட்ட பல கூட்டணிகளில் தேமுதிக போட்டியிட்டிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கைக்கு எட்டாமலேயே இருந்தது. தற்போது 2026-ல் திமுக கூட்டணியில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை தேமுதிக தொண்டர்கள் ஒரு பெரும் வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்க்கின்றனர்.
இதுவரை தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பணியாற்றிய கட்சி, முதல்முறையாகப் பொருளாளர் சுதீஷ் மூலம் இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கடமையாற்ற உள்ளது. இந்த தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, வரும் 16-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச கூட்டணிக் கட்சிகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்படும்.
திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில், முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் தேதியில் தேமுதிக சார்பில் அமைக்கப்பட்ட குழு சென்று பேச்சுவார்த்தை நடத்தும். எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பதைப் பேசி இறுதி செய்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.
தேமுதிக-வின் வாக்கு சதவீதம் குறித்து விமர்சிப்பவர்கள், தேமுதிக யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் கட்டமைப்பு என்ன என்பதைத் தெரிந்து பேச வேண்டும். காழ்புணர்ச்சியால் சொல்லப்படும் பொதுவான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுக-விடம் துணை முதல்வர் பதவி கேட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. நாங்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாரிடமும் அடம் பிடித்தது கிடையாது. மற்ற கட்சிகள் தங்கள் உரிமையைக் கேட்பது போல, எங்களுக்கான உரிய இடத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
அது நிச்சயமாக அமையும். விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்துத் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். சுதீஷ் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே உழைத்து வருபவர். அவருக்குப் பதவி பெற அனைத்து தகுதியும் உரிமையும் உள்ளது. திமுக-வின் தேர்தல் அறிக்கை வந்த பிறகு, தேமுதிக தனது கருத்துக்களை முன்வைக்கும். குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இது தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று முதல்வர் கூறுவதுபோல, இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்குமான இந்தப் போரில் தேமுதிக மகத்தான வெற்றி பெற்று, திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.