தமிழகம்

சின்னம்மை பரவும் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரை சின்னம்மை பரவும் காலம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. குளிர்காலத்தில் இருந்து வெப்பமான பருவம் மாறும்போது, சின்னம்மை பரவல் அதிகரிக்கிறது. தமிழகத்திலும் சின்னம்மை பரவும் காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இருப்பதால், பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

          

அதில் கூறியிருப்பதாவது: சின்னம்மை என்பது எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோயாகும். பாதிக்கப்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிவரும் காற்று துளிகள் மூலமும், கொப்பளங்களில் இருந்து வரும் திரவத்தை தொடுவதால் அல்லது அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவ தாலும் சின்னம்மை பரவுகிறது.

இந்த நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் தொடங்கி, பிறகு உடலில் சிறிய நீர் திவளைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி. உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து, பின்னர் உடைந்து காய்ந்து விடும். சின்னம்மையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்துதல் மற்றும் சரியான பராமரிப்பு மேற்கொண்டால் எளிதில் குணமாகிவிடும்.

கைகளை அடிக்கடி கழுவவேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள், சத்தான உணவுகளை உண்ணவேண்டும். பாதிக்கப்பட்டவர் களை, அவர்களின் அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை (7-10 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ளகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முழுமையாக குணமடைந்த பிறகே அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை, கிருமிநாசினி கொண்டு அல்லது சுடு தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் யாரிடமாவது இருந்தால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம். அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சின்னம்மை குறித்த மேலும் தகவல்களுக்கு 104 என்ற 24 மணிநேர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT