சென்னை: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காகச் சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் நீர்நிலைகளைத் தூர் வார ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், அலுவலர்களை ஒருங்கிணைக்கவும், சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அமைச்சர்கள் ரமேஷ் (திருவொற்றியூர், மணலி), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (மாதவரம், தண்டையார்பேட்டை), அருண்ராஜ் (ராயபுரம், திருவிக நகர்), விஜய் பாலாஜி (அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை), விஜய் தமிழன் பார்த்திபன் (ஆலந்தூர், அடையாறு), பிரபு (கோடம்பாக்கம், வளசரவாக்கம்), விக்னேஷ் (பெருங்குடி, சோழிங்கநல்லூர்) ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவார்கள். மேலும், சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பார்.
இதேபோல், அமைச்சர்களுடன் இணைந்து நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாலசுப்ரமணியம் (திருவொற்றியூர்), குமரவேல் பாண்டியன் (மணலி), அருண்ராஜ் (மாதவரம்), கண்ணன் (தண்டையார்பேட்டை), ஆஷா அஜித் (ராயபுரம்), கணேசன் (திருவிக நகர்), காயத்ரி கிருஷ்ணன் (அண்ணா நகர்), விவேகானந்தன் (அம்பத்தூர்), கிறிஸ்துராஜ் (தேனாம்பேட்டை), கோபால சுந்தரராஜ் (கோடம்பாக்கம்), விஜய ராணி (வளசரவாக்கம்), வாஹே சங்கேத் பல்வந்த் (ஆலந்தூர், செந்தில் ராஜ் (அடையாறு), மகேஸ்வரி (பெருங்குடி), பாஸ்கர பாண்டியன் (சோழிங்கநல்லூர்) ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து செயல்படுவார்கள்.
இந்தக் கண்காணிப்பு அலுவலர்கள், பருவ மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளைக் கண்டறிதல், நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்தல், ஜேசிபி இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் படகுகளைத் தயார் செய்தல், மருத்துவ முகாம்களை அமைத்தல், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தல் மற்றும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
202 தூர் வாரும் பணி
சென்னை, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளைப் பருவ மழைக்கு முன்பாகவே சீரமைக்க வேண்டும் என்று நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாலாறு வடிநில வட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 169 பணிகளுக்காக ரூ.39 கோடியும், வெள்ளாறு வடிநில வட்டத்தில் கடலூரில் 33 பணிகளுக்காக ரூ.3 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூவம் ஆறு, அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆரணி ஆறு ஆகிய ஆறுகள் மற்றும் செம்பரம்பாக்கம், போரூர் உள்ளிட்ட ஏரிகளின் உபரிநீர் செல்லும் கால்வாய்கள் என மொத்தம் 202 இடங்களில் தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன. ஆகாயத் தாமரைகளை அகற்றுதல், மதகுகளைச் சீரமைத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை செப்.1 திறப்பு
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேட்டூர் அணையில் 2026 - 27 பாசன ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்குரிய நீர் 41.223 டிஎம்சி மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டிஎம்சியைப் பராமரிக்க வேண்டியதாலும், டெல்டா பாசனத்துக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. எனினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டது.
மேலும், தமிழத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காகத் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதன் விளைவாக பில்லிகுண்டுலுவில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி, 9,000 கன அடி மற்றும் 12,000 கன அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டுள்ளன.
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், நீர்வரத்து மற்றும் வடகிழக்கு பருவ மழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசன தேவைகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து செப்.1-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.
இதையொட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களைப் போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.