காங்கிரஸ் - நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியதிலிருந்தே காங்கிரஸை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது திமுக. இந்த நிலையில், “விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்து விட்டார்” என்று அண்மையில் பிரவீன் சக்கரவர்த்தி பேசியதும் திமுக கூட்டணிக்குள் குமைச்சலை அதிகரித்திருக்கும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.
விஜய்யை நீங்கள் சந்தித்துப் பேசியது முதலே திமுக - காங்கிரஸ் கூட்டணி நிம்மதியைத் தொலைத்துவிட்டதே..?
ஏங்க... ஒருத்தர் இன்னொருத்தர சந்திக்கவே கூடாதாங்க? நான் விஜய்யை சந்தித்தேன். அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
காங்கிரஸ் குழுவினர் ஸ்டாலினை சந்தித்த சமயத்தில் நீங்கள் விஜய்யை சந்தித்தது தானே சர்ச்சையாகி இருக்கிறது?
எப்போது சந்தித்தாலும், இப்போது ஏன் சந்தித்தார் என்று தான் கேட்பார்கள். இரண்டு மனிதர்கள் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
திமுக-வை உங்களுக்குப் பிடிக்காது என்பதால் காங்கிரஸை அந்தக் கூட்டணியில் இருந்து நகர்த்தப் பார்க்கிறீர்கள் என்கிறார்களே..?
மிகவும் தவறான தகவல்.
உண்மையாகவே இருந்தாலும், ‘விஜய் அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார்’ என்று நீங்கள் சொல்வது கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்காதா?
நீங்களே சொல்றீங்க... தமிழக அரசியலில் விஜய் மூன்றாவது சக்தியாக உருவாகி இருப்பது உண்மையா இல்லையா? அப்படி இருக்கையில், தமிழக அரசியலை கவனித்து வரும் மக்களுக்கு நான் என்ன சொல்லக்கூடாத ரகசியத்தையா சொல்லிவிட்டேன்.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்காரராக சொன்னதில் தானே சிக்கல்?
அப்போ, காங்கிரஸ்காரர்னா பொய் சொல்லலாமா?
தனிப்பட்ட கருத்து என்று சொல்லிவிட்டு எதை வேண்டுமானாலும் பேசுவது சரிதானா?
பாருங்க... காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கே சுதந்திரத்தையும் உரிமையையும் வாங்கிக் கொடுத்த கட்சி. அப்படி இருக்கும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் கிடையாதா? தமிழ்நாட்டில் என்ன மாதிரி அரசியல் நடத்துறீங்கன்னு எனக்குத் தெரியல.
மற்ற மாநிலங்கள்ல காங்கிரஸ் கட்சி எப்படி நடக்குதுன்னு பாத்துருக்கீங்களா... அதுதான் காங்கிரஸ், அதுதான் காங்கிரஸ் பலம், அதுதான் காங்கிரஸ் கலாசாரம். அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்பதும் அனைத்தையும் அடித்து உடைப்பதும் பாஜக கலாசாரம். நாங்கள் காங்கிரஸ் கட்சி. கட்சிக்கு விரோதமாக நாங்கள் ஏதாவது சொல்லி இருந்தால் அது தவறு. கட்சியின் நலனுக்காக பேசுவதில் என்ன தவறு?
காங்கிரஸ் வளர வேண்டும் என நினைத்திருந்தால் முன்கூட்டியே அதற்கான பாதையை தேர்வு செய்திருக்கலாமே?
முன்கூட்டியேன்னா... 10 வருஷத்துக்கு முந்தியா? இதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. நான் சொல்வது, காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. 60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமடைந்துவிட்டது. அதைப் பலப்படுத்துவதற்காக, கட்சியின் எதிர்காலத்துக்காக, நலனுக்காக வைக்கும் கோரிக்கை. இதை வெளிப்படையாகச் சொல்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே!
இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளுமே அதிகாரத்தில் பங்கு தர மறுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
நான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொறுப்பில் இருப்பவன். மற்ற மாநிலங்களையும் கவனிக்கிறேன். மஹாராஷ்டிரா, பிஹார், ஜார்கண்ட், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் காங்கிரஸ் உடன் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்கின்றன. தமிழ்நாடும் இந்தியாவில் ஒரு மாநிலம் தான். அப்படி இருக்கையில், மற்ற மாநிலங்களில் இல்லாத மனநிலை இங்கு மட்டும் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
தமிழக காங்கிரஸார் என்னதான் குரல் எழுப்பினாலும் கடைசியில், டெல்லி தலைமை அதற்கு மாறாக முடிவெடுத்துவிடும் என்கிறார்களே..?
காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் எண்ணங்களையும் கோரிக்கைகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அது அவர்களின் உரிமை. அதையெல்லாம் கேட்டுவிட்டு இறுதி முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் தலைமை தான்.
இந்த நேரத்தில் அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு என காங்கிரஸுக்குள் இருந்தும் குரல்கள் வருகிறதே?
அப்படி யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்தைக் கேட்டதே இல்லை. கிரிஷ் சோடங்கர் சொன்னது போல், எந்த அரசியல் கட்சி தான் அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று சொல்லும்?
திமுக-விடம் தொகுதிகளை அதிகமாகப் பெறத்தான் ‘அதிகாரத்தில் பங்கு’ கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுப்பதாகச் சொல்கிறார்களே..?
இதெல்லாம் தேவையில்லாத ஊகம். காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் விரும்புவது ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது தான்.
திமுக ஆட்சி குறித்து பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொல்கிறார்?
மத்திய பாஜக அரசின் கட்டுப்பாடுகள், நிதி கொடுக்காமல் வைத்த சூழ்நிலைகள் இவை அனைத்தையும் திமுக ஆட்சி திறமையாக எதிர்கொண்டு சமாளித்திருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்த அடிப்படை ஆதாரம் நிதி. அதில் இத்தனை பெரிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தும் அதையெல்லாம் தாண்டி சிறப்பாக ஆட்சியை நடத்தி இருக்கிறது திமுக. கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் தர தயாராக இருக்கிறதாமே தவெக?
அதெல்லாம் எனக்குத் தெரியாது.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சம்பந்தப்பட்ட ஆடியோ ஒன்றை வெளியிட்டதால் தான் திமுக-வுக்கு உங்கள் மீது கோபம் என்கிறார்களே... உண்மையா?
இது சிரிக்கத்தக்க ஊகமாகும். யாரோ யூ டியூபில் பேசுவதற்கெல்லாம் என்னிடம் பதிலை எதிர்பார்க்காதீர்கள்.
பிரவீன் சக்கரவர்த்தியும் மாணிக்கம் தாகூரும் ராகுலுக்கு தெரியாமலா இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று சந்தேகம் எழுப்புகிறாரே தமிழிசை?
அவங்களத் தான் கேட்கணும். தமிழ்நாட்டில், சுயமரியாதை, சுதந்திரம்னு எல்லாம் பேசுறாங்க. ஆனால், அதன் அடிப்படையே புரியாம இருக்காங்க. ஓர் அரசியல்வாதி தனது கருத்தைச் சொல்லக் கூட சுதந்திரம் கிடையாதா? தமிழிசைக்கு தண்ணீர் குடிக்க வேண்டுமானால் கூட தலைமையில் பர்மிஷன் கேட்க வேண்டி இருக்கும். காங்கிரஸ் அப்படி இல்லை; சுதந்திரமான கட்சி.