மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று மாலை 6 மணியளவில் தரிசனம் செய்தபோது 10 நிமிடங்கள் நீடித்த மின் தடையால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனை செய்யவும் கூட முடியவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அக்.30-ல் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலையில் வருகை தந்தார்.
அவனியாபுரத்திலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கிய அவர், பின்பு மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பழனிசாமி கோயிலுக்குள் சென்ற 10 நிமிடத்தில் மின் தடை ஏற்பட்டது. சுவாமி சன்னதியிலிருந்து வெளியேறும் வரை சுமார் 10 நிமிடத்துக்கு மேல் மின் தடை நீடித்ததால் தரிசனம் செய்ய முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட கட்சியினர் சிரமப்பட்டனர். மேலும், பக்தர்களும் சிரமம் அடைந்தனர்.
அதேவேளையில் கோயிலுக்குள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணியும் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் நடந்ததால் உண்டியல் எண்ணும் பணியும் பாதித்தது. இதனால் அதிர்ச்சிடையந்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக ஜெனரேட்டரை இயக்கி மின் தடையை சரி செய்தனர்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறுகையில், “கோயிலில் இறைவனை பிரார்த்தனை செய்யும்போதும் மின் தடை ஏற்படுகிறது. தவெக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியவில்லை, இறைவனை பிரார்த்தனை செய்யவும் முடியவில்லை” என்றார்.