சென்னை: அமைச்சர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் கூட மின்தடை ஏற்படுவதாகவும், மின்வெட்டை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கலந்தாய்வுக் கூட்டத்தில் செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற நிலையிலும் கூட்டத்தின் போது மின்தடை ஏற்பட்டிருக்கிறது.
சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. கோவையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் அழுத்த பிரச்சினை காரணமாக ரூ.30 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன.
வழக்கத்தை விட மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பது தான் மின் வெட்டுக்கு காரணம் என்றும், அதை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கப்படுவதாகவும், அதனால் மின்வெட்டு சீராகி விட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்வெட்டை சரி செய்வது சாத்தியமில்லாத செயல் அல்ல.
தேசிய சந்தையில் இருந்தும், தமிழகத்தின் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்தும் கூட மின்சாரம் வாங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ளாதது தான் மின் தடைக்கு காரணம்.
மின்சார வாரியத்தில் முதல்வர் விஜய் நேரடியாக ஆய்வு செய்தும் மின்வெட்டு தொடர்வதை ஏற்கமுடியாது. மின்வாரியம் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்
அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போதிய கிடங்கு வசதிகள் இல்லாததும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அகற்றப்படாததும் நெல் கொள்முதலை பாதிக்கிறது.
கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.