தமிழகம்

தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

தவெகவுக்கு அதிகமாக கிடைத்த தபால் வாக்குகள்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தேர்தல்களில் வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகளை திமுக மொத்தமாக பெறும் நிலையில், இம்முறை தவெகவுக்கு அதிகமான தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

அதிக இடங்களில் வென்றுள்ள தவெக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் என பலரை தவெக வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.

தபால் வாக்குகள்

வழக்கமாக எல்லா தேர்தல்களிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தமாக திமுகவின் பக்கமே இருப்பார்கள். இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செலுத்தும் தபால் வாக்குகளை திமுகவே மொத்தமாக பெறும் நிலை இருக்கும்.

ஆனால், இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர் செலுத்திய தபால் வாக்குகளில் தவெகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் திமுகவின் தோல்விக்கு இந்த தபால் வாக்குகளும் காரணமாக இருந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டபேரவை தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தபால் வாக்குகளை மிக கணிசமாக பெற்றுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 2,227 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் 760 தபால் வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தவெக வேட்பாளர் நாத்துக்கு 636 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக வேட்பாளருக்கு 334, நாதக வேட்பாளருக்கு 178 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.

திருச்செந்தூர் தொகுதியில் 2,568 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 1,159 வாக்குகளை பெற்றார். தவெக வேட்பாளர் முருகனுக்கு 501, பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு 494, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியாவுக்கு 118 தபால் வாக்குகள் கிடைத்தன.

வைகுண்டம் தொகுதியில் 3,094 தபால் வாக்குகள் பதிவான நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 961 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 916, தவெக வேட்பாளருக்கு 671, நாதக வேட் பாளருக்கு 241 தபால் வாக்குகளும் கிடைத்துள்ளன. கோவில்பட்டி தொகுதியில் 2,723 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக 840, தவெக 658, அதிமுக 621, நாதக 228 வாக்குகளை பெற்றுள்ளன.

விளாத்திகுளம் தொகுதியில் 2,474 தபால் வாக்குகள் பதிவான நிலையில் திமுக 937, தவெக 589, அதிமுக 418, நாதக 206 வாக்குகளை பெற்றுள்ளன. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 3,274 தபால் வாக்குகள் பதிவான நிலையில் தவெகவுக்கு 1064 வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக 615, அமமுக 481, நாதக 313 தபால் வாக்குகளை பெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். தேர்தலுக்கு முன்பாக அரசு சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதிமொழிகளை அளித்து போராட்டங்களை வாபஸ் பெற வைத்தனர்.

இருப்பினும் திமுக அரசு மீதான தங்களது அதிருப்தி குறையாததால் மாற்றத்தை விரும்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தவெகவுக்கு அதிக வாக்குகளை செலுத்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

நோட்டா வாக்குகள் குறைவு

வழக்கமாக திமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள். இதனால் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் குறைவாக உள்ளன.

திமுக, அதிமுக கட்சிகளை பிடிக்காதவர்கள் தவெகவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியிருப்பதையே இது காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தொகுதியில் 853, திருச்செந்தூரில் 722, ஸ்ரீவைகுண்டத்தில் 579, கோவில் பட்டியில் 593, விளாத்திகுளத்தில் 642, ஓட்டப்பிடாரத்தில் 879 வாக்குகள் மட்டுமே நோட்டாவில் பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT