சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மெரினா கடற்கரையில் மக்கள் மழையில் நனைந்தவாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (ஜன.2,3) தமிழகத்தில் ஓரிருஇடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 7-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 3 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 11 செ.மீ., எண்ணூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.