சென்னை: துறைமுகம் - மதுரவாயல் இடையேயான மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று சென்னை துறைமுகத்தின் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் தலைவர் ஜெ.பி.ஐரின் சிந்தியா ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், இரு துறைமுகங்களும் இணைந்து மொத்தமாக 107 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளன.
இதில் சென்னை துறைமுகம் 57.9 மில்லியன் டன் சரக்குகளையும், காமராஜர் துறைமுகம் 49.08 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளன. இரு துறைமுகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,400 கோடியை கடந்துள்ளது. இரு துறைமுகங்களின் மூலதன செலவினமும் ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.1,185 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளதுடன், துறைமுக வரலாற்றிலேயே மிக அதிபட்சமாக ரூ.434.29 கோடி நிகர உபரி வருவாயை பதிவு செய்துள்ளது.
காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.1,239 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியதுடன், நாட்டின் முன்னணி துறைமுகங்களிலேயே மிகக் குறைந்த இயக்க சதவீதமாக 25.48 சதவீதத்தை பதிவு செய்திருக்கிறது.
இதேபோல் துறைமுகத்தின் வட்டி, வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் (எபிட்டா) வரலாற்றிலேயே முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாயை கடந்து ரூ.1,071.63 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காமராஜர் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைக் கையாளுவதற்கு ஏதுவாக ரூ.440 கோடி மதிப்பில் 6-வது கட்ட ஆழ்கடல் தூர்வாரும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
இதனால் 2.44 லட்சம் டன் சரக்கு கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய கப்பல்களையும் தற்போது கையாள முடிகிறது. இதற்கிடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை துறைமுகத்தின் ‘அவுட்டர் ஹார்பர் ப்ராஜெக்ட்’ தொடர்பாக ‘ரைட்ஸ்’ நிறுவனம் போக்குவரத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
செங்கடல் பகுதியில் நிலவும் சர்வதேச பதற்றங்கள் மற்றும் ஈரான்-அமெரிக்கா இடையேயான பிரச்சினைகள் காரணமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தாலும், தற்போது மாற்று வழிகள் மூலம் அவை சீரமைக்கப்பட்டுவிட்டன.
எனினும் இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் வாகனங்கள் ஏற்றுமதியில் 6 முதல் 7 லட்சம் டன் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் சேமிப்புக் கிடங்கு வசதிகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.