தமிழகம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம்: அதிவேக சோதனையை அடுத்த வாரம் நடத்த திட்டம்

செய்திப்பிரிவு

பூந்தமல்லி - வடபழனி வரை உயர்மட்ட மெட்ரோ ரயில் தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம் அடுத்த வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம்- வடபழனி வரை 14.64 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது.

          

இவ்வழித் தடத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இத்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி மற்றும் அவரது குழுவினர் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் நாளில், பூந்தமல்லி- அய்யப்பன் தாங்கல் நிலையம் வரை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளங்கள் மற்றும் முக்கிய மேம்பால கட்டமைப்புகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. 2-ம் நாளில் அய்யப்பன் தாங்கல் நிலையம்- வடபழனி மெட்ரோ நிலையம் வரை 8.50 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

3-ம் நாளில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 நாட்கள் ஆய்வை முடித்து திரும்பி சென்றனர். இந்நிலையில், அடுத்த வாரத்தில் மெட்ரோ ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "இத்தடத்தில் மெட்ரோ ரயில் பாது காப்பு ஆணையர் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்தனர். இது அவர்களுக்கு திருப்திகரமாக இருந்தது. தானி யங்கி முறையில் மெட்ரோ ரயில் ஓட்டுவது தொடர்பான நிகழ்வுக்கு (புரோகிராம்) ஓர் ஆவணம் தேவைப்படுகிறது.

இதை 3-வது நபர் வழங்க வேண்டும். இந்த ஆவணம் ஓரிரு நாட்களில் கிடைத்து விடும். அதன்பிறகு, பிப்.18-ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் மீண்டும் பாதுகாப்பு ஆணையர் வந்து,சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் இந்த வழித்தடம் தயாராக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT