கோப்புப்படம் 
தமிழகம்

ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு - விடுபட்டோருக்கு விநியோகப் பணி நீடிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 97 சதவீத பயனாளர்களுக்கு, அதாவது, 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 ரொக்கமாக வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும், விடுபட்டவர்களுக்கு விநியோகப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தைப் பொங்கலை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு 2 கோடியே 22 லட்சத்து 91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரொக்கப் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் ரூ.3,000 வீதம் ரொக்கமாக ரூ.6687.51 கோடியும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மதிப்பிலும் இவற்றுடன் ரூ.668.12 கோடியில் வேட்டி, சேலை என மொத்தம் ரூ.7,604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.4 முதல் 7-ம் தேதி வரை வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜன.8-ம் தேதி சென்னை பட்ரோடு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அன்று முதலே விநியோகம் தொடங்கியது. விவசாயிகளிடமிருந்து தரம் பார்த்து கரும்பு கொள்முதல் செய்வதில் துறை பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்தனர். இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்க கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6,453.54 ரொக்கத்துடன், குறுகிய நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பை 97 சதவீதம் வழங்கியது முதல்வர் ஸ்டாலின் அரசு தான். இப்பெருமைக்கும் சாதனைக்கும் அயராது பணிகளை மேற்கொண்ட இத்துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT