தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையக்குழு அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
தமிழகம் உட்பட பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந் திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத்தேர்தல் ஆணையர்கள் மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் சஞ்சய் குமார், பானு பிரகாஷ் யெத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக இக்குழுதமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த பிப்.11-ம் தேதிசென்னை வந்தது. மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், மத்திய அரசு துறை அதிகாரிகளுடன், தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு தேவையான அலுவலர்கள், வாகனங்கள் போதுமான அளவில் உள்ளதா என்பது குறஇத்தும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (ஆட்சியர்கள்) மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எத்தனை வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன, பதட்டமான வாக்குச்சாவடிகள் எத்தனை, தேவையான துணை ராணுவப்படை எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து தேர்தல் ஆணைய குழு கேட்டறிந்தது. அதன் தொடர்ச்சியாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், தேவையான அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சென்னையில் இரு நாட்களில் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை தேர்தல் ஆணையக்குழு, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. இதனடிப்படையில் விரைவில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முன்னேற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தேர்தல் ஆணைய குழு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
26-ல் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை: தேர்தல் ஆணையக்குழு சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தியநிலையில் அது குறித்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையரிடம் அளிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் பிப்.25-ம் தேதி புதுச்சேரிக்கும், பிப்.26-ம் தேதி சென்னைக்கும் தலைமை தேர்தல் அதிகாரி கியானேஷ் குமார் வரவுள்ளார். இதன்படி தமிழக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசிக்கிறார். அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.