தமிழகம்

அதிமுக பேச மறந்த அம்மா உணவகங்கள் - விஜய் கையில் எடுப்பதன் அரசியல் பின்னணி

குள.சண்முகசுந்தரம்

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். சாமானிய மக்களுடன் தொடர்புடைய 620 அம்மா உணவகங்களை கவனிக்க வேண்டியது அவசியமான நடவடிக்கைதான் என்றாலும் இதற்குள்ளும் விஜய்யின் நுண்ணிய அரசியல் இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போதே, “எந்த ஆட்சி வந்தாலும் திமுக அரசின் திட்டங்களை ஒதுக்கிவிட முடியாது” என்று சொன்னார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அதன்படியே, “முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் தொடரும்” என்று பேரவையின் முதல் கூட்டத்திலேயே அறிவித்தார் முதல்வர் விஜய். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தவெக ஆட்சியிலும் வழக்கம்போல் தொடர்கின்றன. இவை அனைத்துமே திமுக அரசின் திட்டங்கள்தான்.

திமுக அரசில் கட்டணமின்றி விடியல் பயணம் சென்ற பெண்களும், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டத்தால் பயன்பெற்ற மாணவ - மாணவியரும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதா மாதம் கை நீட்டி வாங்கியவர்களும் கூட இம்முறை தவெக-வுக்கு வாக்களித்தார்கள். இவர்களின் அபிமானத்தைத் தக்கவைக்கவே இந்தத் திட்டங்களை தொடர அனுமதித்திருக்கிறார் விஜய்.

ஒருவேளை, இதில் ஏதாவது ஒன்றை நிறுத்தி இருந்தால்கூட திமுக அதை வைத்து அரசியல் செய்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டார் விஜய். அதேசமயம், இத்தனை நாளும் அதிமுக-வுக்கு வாக்களித்து வந்த மக்களும் இம்முறை விஜய் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, ஆட்சியமைக்க இவர்களின் ஆதரவைக் கோர வேண்டாம் என விஜய் ஒதுக்கிவைத்த நிலையிலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தனியாக வந்து தவெக அரசுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். இவர்களையும், தேர்தலில் தனக்கு வாக்களித்த அதிமுக அபிமானிகளையும் மகிழ்விக்கும் விதமாகவே அம்மா உணவகங்களை கையில் எடுத்திருக்கிறார் விஜய்.

2013-ல் தமிழகத்தில் அம்மா உணவகங்களுக்கு ஜெயலலிதா விதை போட்டார். ஆனால், அவருக்குப் பின்னால் வந்த அதிமுக அரசு இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல ஏனோ அவ்வளவு மெனக்கெடவில்லை.

ஜெயலலிதாவைப் பின்பற்றி உத்தராகண்டில் ‘இந்திரா அம்மா போஜனாலயா’, டெல்லியில் ‘அடல் உணவகங்கள்’ மேற்கு வங்கத்தில் ‘மா உணவகங்கள்’, ஆந்திரத்தில் ‘அண்ணா கேன்டீன்’, கர்நாடகத்தில் ‘இந்திரா கேன்டீன்’, மத்தியப் பிரதேசத்தில், ‘தீன் தயாள் அந்தியோதயா ரசோய் யோஜனா’ என போட்டிபோட்டுக் கொண்டு அரசு மலிவு விலை உணவகங்களை திறந்தார்கள். இதில், வங்கத்தில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, மலிவு விலை உணவகத்தில் 5 ரூபாய்க்கு மீன் சாப்பாடே தருவதாக அறிவித்திருக்கிறது.

மகளிர் விடியல் பயணத்தையும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் அமல்படுத்தியதில் பிற மாநிலங்களுக்கு தாங்கள்தான் முன்னோடி என மூச்சுக்கு முந்நூறு தரம் சொன்னது திமுக. ஆனால், பிற மாநில அரசுகளின் மலிவு விலை உணவகங்களுக்கு எங்கள் ‘அம்மா’ தான் முன்னோடி என பிரச்சாரம் செய்ய அதிமுக-வுக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

அதேசமயம் இந்தத் திட்டம் தனக்கு வாக்களித்த அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு புத்துயிரூட்ட முன்வந்திருக்கிறார் விஜய். அதிமுக அனுதாபிகளை தன்பால் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் நுட்பமும் இதற்குள்ளே இருக்கிறது.

SCROLL FOR NEXT