தமிழகம்

எய்ம்ஸ் முதல் மெட்ரோ வரை: மதுரை வளர்ச்சித் திட்டங்களில் அரசியலா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ், விமான நிலையத்தை தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திலும் அரசியல் விளையாட்டுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மதுரையைவிட சிறிய நகரங்களாக இருந்த பல நகரங்கள் தற்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் மிகப் பெரிய முன்னேற்றத்தை தொட்டுவிட்டன.

ஆனால், வரலாற்று பெருமைகளையும், சுற்றுலா முக்கியத்துவத்தையும் கொண்ட உலகின் முக்கிய ஆன்மிக நகரான மதுரை நகரமோ இன்னும் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டமைப்புகளுடன் பின்தங்கியே நிற்கிறது. ஆனால், நகரின் மக்கள்தொகை 20 லட்சத்தை தாண்டிய நிலையில், நெரிசல், உள்கட்டமைப்பு குறைபாடுகளால் நகரின் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை மதுரைக்கு அறிவிக்கப்பட்டதும், மதுரையும், தென்மாவட்டங்களும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தற்போது வரை இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் முதல் மாநில தலைவர்கள் வரை அனைவருமே மத்திய அரசை நோக்கி கைகாட்டி தப்பிக்கப் பார்க்கின்றனர். பிறகு எதற்கு அவர்கள், தேர்தலுக்கு தேர்தல் இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்குகிறார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்று திமுக வாக்குறுதி வழங்கியது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிதியமைச்சராக பதவியேற்ற பழனிவேல் தியாகராஜன், விமான நிலைய விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்த நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரங்களில் முடிவடையும் என்றார்.

ஆனால், தற்போது வரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை மாநில அரசு முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. மாற்றுச்சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கவில்லை.

இதனால் புதிதாக சுற்றுச்சுவரை மட்டும் கட்டிவிட்டு விமான நிலைய ஆணையம் காத்திருக்கிறது. நிலத்தை ஒப்படைக்க உள்ளூர் அமைச்சர்கள் திமுக தலைமையிடம் வலியுறுத்தியதாக தெரியவில்லை.

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட நாட்டின் பிற மருத்துவமனைகள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் இடம் தேர்வு செய்வதில் தொடங்கி பல்வேறு அரசியல் காரணங்களால் தாமதமாக கட்டுமானப் பணி தொடங்கியதால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்த 2 திட்டங்களிலும் தற்போதுவரை மத்திய அரசு மீது பழியை போடுவதிலேயே மாநில கட்சிகள் குறியாக உள்ளன.

தற்போது இந்தப் பட்டியலில், மதுரை மெட்ரோ ரயில் திட்டமும் சேர்ந்துகொண்டது. இந்த திட்டம் அறிவித்த நாள் முதல் தற்போது வரை எய்ம்ஸ், விமான நிலைய விரிவாக்கத்துக்கு வந்த சிக்கல்களே இதற்கும் வரத் தொடங்கியுள்ளன.

தற்போது இந்த திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாகவும், ரத்து செய்துவிட்டதாகவும் கண்டன குரல்கள் எழுப்பும் தலைவர்களும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும், இந்த திட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து அதன் முன்னேற்றங்களையும், உடனடியாக திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையானால், சென்னையின் அடுத்தகட்ட மெட்ரோ பணிகளும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கமும் எப்படி சாத்தியமாகிறது?

மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் நில ஆர்ஜித பணிகளே தொடங்காதபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எப்படி புதிய ரயில் பாதையும், ரயில் நிலையங்களும் அமைந்தது என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால் நமது மக்கள் பிரதிநிதிகளின் ஆர்வமின்மைதான் மதுரையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பது புரிகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தலில் இந்த 3 திட்டங்களையும் கூறித்தான் ஆளும் கூட்டணி மதுரை மாவட்டத்தில் வெற்றியும் பெற்றன.

இதனால் வரக்கூடிய தேர்தலில் இவற்றையே சொல்லி தேர்தல் களத்திற்கு வர முடியாது. மக்கள் மிக விழிப்பாக உள்ளதால், கட்சி வேறுபாடில்லாமல் மக்கள் பிரதிநிதிகளாவது தங்கள் அரசியல் விளையாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களை ஏமாற்றமால் மதுரையில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விமான நிலைய விரிவாக்கம், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT