அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப் படம்
மதுரை: திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, மனைவியுடன் மோசடி புகாரில் கைதான நிலையில், அவர் மீதான புகார்களும், மோசடி பட்டியலும், ‘நியோமேக்ஸ்’ போன்று குவிந்து வருவதால், விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால், திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரை திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் உதவியாளராக இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு நீக்கப்பட்டவர் மதுரை கலைநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்பாலாஜி(42). இவரும், இவருடைய மனைவி கலாவதியும் பணம் மோசடி, வீட்டுமனைகளை ஏமாற்றி வாங்கியது, ரியல் எஸ்டேட் தொழில் என்ற போர்வையில் பொதுமக்களிடம் தவணை முறையில் பணம் வசூலித்து மோசடி செய்தது போன்ற பல்வேறு வழக்குளில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரை பயன்படுத்தி ஜெய்பாலாஜி சேர்த்த சொத்து விவரம், செய்த மோசடிகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சரிடம் உதவியாளராக பணிபுரியும் இரு உதவியாளர்களை வரவழைத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடந்தது.
ஆளுங்கட்சி அமைச்சரிடம் வெறும் உதவியாளராக இருந்த ஒருவர், கணக்கில் அடங்காத சொத்துகளை குவித்து இருப்பது, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பது, தனிநபராக அவர் மட்டுமே இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
அதனால், அவருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் அரசு அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் பட்டியலை சேகரித்து அவர்களை போலீஸார் விசாரணைக்கு அழைக்கத் தொடங்கி உள்ளனர். போலீஸாரின் இந்த விசாரணை, தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ‘மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜெய்பாலாஜி கடந்த 2013-ல் அவரது பெயரில் ‘ மருதம்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும், தனது மாமா பெயரில்‘ மதுரம்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி இருக்கிறார். இவற்றின் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளார். குறைந்த விலையில் வீட்டு மனைகள் வழங்குவதாக பணம் வசூலித்துள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு முறையாக வீட்டு மனைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
இவரது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மூலம் மதுரை, ராமநாத புரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பொருளாதார குற்றத்தடுப்பு, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகங்களிலும் புகார்கள் கொடுத்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சேகரிக்கும்போது, ‘குட்டி நியோமேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி போன்று ஜெய்பாலாஜி மீதான புகார்கள் அதிகரிக்கிறது.
மதுரம், மருதம் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் விசாரிக்க அழைப்பு விடுத்துள்ளோம். ஜெய்பாலாஜி மக்களிடம் வசூலித்த தொகை சுமார் ரூ.150 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நடத்திய ஒருவர், அமைச்சரின் உதவியாளராக எப்படி இருக்க முடிந்தது.
ஒருவேளை அமைச்சருக்கு தெரிந்தே அவர் செயல்பட்டாரா என்ற கேள்விகளும் தற்போது எழுந்தன. இது தொடர்பாக அமைச்சரிடம் தற்போது உதவியாளர்களாக இருக்கும் தனசேகரன், வருண் ஆகியோரிடம் ஜெய்பாலாஜி, அவரது நிறுவனங்கள் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளோம். இவ்வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.