சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து, எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது. அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்துக்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா?
வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாகவும், இரண்டாவது விமான நிலையத்துக்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதல்வர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்துக்கான இடத்தைத் தேர்வு செய்ய தாமதப்படுத்துவதால், தமிழகத்தின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது.
புதிய விமான நிலையத்தை அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கும் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் உருவாக்கிட தகுந்த இடத்தை உடனடியாக அரசு தேர்வு செய்ய வேண்டும்.
பாமக தலைவர் ராமதாஸ்: மீனம்பாக்கம் விமான நிலையம் 2031-ம் ஆண்டில் அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்படுவது அவசியம்.
புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரூ, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
தவாக தலைவர் வேல்முருகன்: ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் நீண்ட நெடிய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இனி வேறு எந்தத் திட்டத்துக்காகவும் பயன்படுத்தப்பட கூடாது.
அந்த நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்.
கொமதேக தலைவர் ஈஸ்வரன்: அரசின் அறிவிப்பை பார்க்கும் பொழுது இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்றுகிறது.
பரந்தூர் விமான நிலையத்தை தடுத்திருப்பது தமிழக எல்லைப் பகுதியில் ஆந்திர அரசு திட்டமிடுகின்ற விமான நிலைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.