தமிழகம்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்!

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சென்னையை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிற்றரசு, விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளர் பிரபாகர ராஜா, மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி ஆகியோரை பூங்கா மற்றும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மாலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முன்னாள் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இணைந்து திருவிக நகர் தொகுதியில் ரவிச்சந்திரன், எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னா, துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு, ராயபுரம் தொகுதியில் சுபேர் கான், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் தொகுதியில் எபினேசர் ஆகிய திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தான் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அதேபோல, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜலகண்டாபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இன்று ஜலகண்டபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.

ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திராவை ஆதரித்து இன்று அந்த தொகுதியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல், வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரா, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தாம்பரம் தொகுதி வேட்பாளர் சரத்குமார், பொன்னேரி வேட்பாளர் ரவி, வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ். பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் ராம்குமார், தி.நகர் தொகுதி என்.ஆனந்த், விருகம்பாக்கம் தொகுதி சபரிநாதன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மூலம் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தவெக தலைவர் விஜய் வழக்கமாக, ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்து வந்த நிலையில், இன்று காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் கூடியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் அமராவதி புதூர், கீழ் உச்சாணி, சருகனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில், இவர்களுடன் சுயேட்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது.

SCROLL FOR NEXT