சென்னை: மதுரையில் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்திய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: மதுரையில் ஆளுநர் அர்லேகர், மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியதுடன், வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்றும் பேசி இருக்கிறார்.
ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக அடுத்த கட்சி எம்எல்ஏக்களை வாங்கும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பதற்றத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் மூக்கை நுழைப்பது கடும் கண்டனத்துக்குரியது. இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் தொடர்ந்தால், அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: வைகையை சீரமைக்க வேண்டுகோள் விடுப்பது தவறில்லை. ஆனால் ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்று கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் தன்னுடைய அரசியல் விரோத போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம், ஆளுநர் தனக்கு வேண்டிய விபரங்களை கேட்டுப்பெறலாம். அதைத் தவிர்த்து அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும்.
விசிக துணை பொதுச்செய லாளரும், அமைச்சருமான வன்னியரசு: காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது போன்றவற்றை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும். முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஆளுநர் சொல்லலாம்.
அதைவிடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது ஜனநாயகத் தையே அவமதிக்கும் போக் காகும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன் உள்ளிட்டோரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.