சென்னை: தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: டாஸ்மாக் மதுபானக் கடைகளை, 2 வார காலத்துக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சுமார் 3,500 டாஸ்மாக் பணியாளர்களின் வேலை வாய்ப்பையும், அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: டாஸ்மாக் கடைகளுக்கு, இணையாக எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த தனியார் மதுக் கடைகள் அரசு அறிவித்துள்ள மூடப்படும் கடைகள் பட்டியலில் இடம் பெறவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள். இதுபோல் தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு, திறந்து இருக்கும் நேரத்தை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. டாஸ்மாக் கடைகளை கடந்து தமிழகம் முழுவதும் சந்துக்கடைகள், மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றையும் மூட வேண்டும். அதேபோல், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மநீம தலைவர் கமல்ஹாசன்: மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது. 717 மதுக்கடைகள் மூடல் என்ற நடவடிக்கையை தொடங்கியிருக்கும் அரசு, இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ்: தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலும், முதல்வர் உடனடியாக மருத்துவக்குழு அமைத்து தமிழகம் முழுவதும் மதுவால் ஏற்படும் தீமை குறித்து ஆய்வு செய்து, அதை வெள்ளையறிக்கையாக வெளியிட்டு அரசின் மதுவிற்பனையை மடைமாற்றம் செய்ய நல்ல தீர்வு காண வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: அனைத்து மதுக்கடைகளையும் மூடி, தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிட வேண்டும்.
இதுபோல், எஸ்டிபிஐ மாநில தலைவர் முகம்மது முபாரக், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் நாகூர் ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.