மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஓரிரு நாளில் பணப்பட்டுவாடா செய்வதற்குத் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், பொதுமக்களின் பணம், நகையை ஓடி ஓடி பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக-அதிமுக கட்சிகள், சின்னங்கள் அடிப்படையில் நேரடியாக 8 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்தத் தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற பிரச்சாரம், தேர்தல் வியூகம், வாக்குறுதிகளைத் தாண்டி கடைசி நேர வாக்காளர் கவனிப்புகளைத்தான் பெரும் நம்பிக்கையாகக் கருதுகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் 2009 திருமங்கலம் இடைத்தேர்தலில் அதுவரை நடந்த தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் பெருமளவில் வழங்கப்பட்டன. அதன்பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களுக்கும், பொதுத் தேர்தல்களுக்கும் ‘திருமங்கலம் பார்முலா’ என்று மோசமான வரலாற்றை ஏற்படுத்தி மதுரைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு அதுபோல் நடக்கும் கவனிப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகளையும், கண்காணிப்புகளையும் ஏற்படுத்திய போதிலும் அவர்களால் முழுமை யாகக் கவனிப்பைத் தடுக்க முடியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்களின் பரிசோதனைகள் சாலைகளில் செல்லும் அப்பாவி மக்கள், சிறு, குறு வியாபாரிகள், பெரும் வியாபாரிகள்தான் பணம், பொருட்களைப் பறிகொடுத்து பாதிக்கப்படுகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் தேர்தலுக்கு முன்பே பணத்தை ஆங்காங்கே கொண்டுசென்று பாதுகாப்பாக வைத்துவிட்டதாகத் கூறப்படுகிறது.
தற்போதும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழுக்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஒவ்வொரு தொகுதிகளின் பகுதி, ஒன்றிய, கிளை, வட்டம், பகுதிச் செயலாளர்கள் வரை கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் கட்சியினர் சிலர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 1 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள் முதல் அதிகபட்சம் 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் வரை உள்ளனர்.
இதில் ஒவ்வொரு தொகுதியிலும் 60 முதல் 75 சதவீத வாக்காளர்களுக்குப் பணம் வழங்க ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் முடிவு செய்து அதற்கான பணத்தை தயார்செய்து ஓரிரு நாட்களில் பட்டுவாடா செய்ய உள்ளனர்.
இதற்காக தங்கள் ஆதரவு வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்களின் பெயர், செல்போன் எண்களை சேகரித்து வைத்து, அவர்களிடம் ஒப் படைக்கும் பொறுப்பை ஒவ்வொரு ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகள், கிளை, வட்ட நிர்வாகிகள் வசம் ஒப் படைத்துள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிக்க, கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் கிளை, வட்ட நிர்வாகிகள் அளவில் ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் விவரங்கள் வழங்கப்பட்டு அவர் களுக்கு பணத்தைக் கொண்டு சேர்க்க ‘மைக்ரோ லெவல்’ விநியோக குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர், என்றனர்.
மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கும், தேர்தல் பணிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகள் பதுக்கி வைத்துள்ள பணத்தைப் பிடிக்கவும், வாக்காளர்களுக்கு பட்டுவாடாவைத் தடுக்கவும் முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரொக்கப்பணமாக சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம் பிடித்துள்ளனர். ரூ.51 கோடியே 17 லட்சம் மதிப்பு நகைகள் பிடித்துள்ளனர். இவற்றில் கட்சிகளிடம் இருந்து இதுவரை பணம் எதுவும் கைப்பற்றவில்லை. சந்தேகப்பட்டு, கட்சிகள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மட்டும் செய்துள்ளனர்.