கும்மிடிப்பூண்டி தொகுதியில், வாகனத்தில் வீதிதோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன்.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 15 பேர் களத்தில்உள்ளனர்.
திமுக - டி.ஜெ.கோவிந்தராஜன்
திமுக வேட்பாளரான டி.ஜெ. கோவிந்தராஜனை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தற்போதைய எம்எல்ஏவான டி.ஜெ.கோவிந்தராஜன், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டநலத்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தும், திமுக தேர்தல் அறிக்கையை முன் வைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, ‘தூய்மை கும்மிடிப்பூண்டி’ திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் வி.சுதாகர்.
அதிமுக - வி.சுதாகர்
அதிமுக வேட்பாளரான வி.சுதாகரை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நடிகை விந்தியா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். கிராமப் பகுதிகளில் சாலை, தெரு விளக்குகள், போதிய குடிநீர், பேருந்து வசதிகள் செய்து தருவேன் என உறுதியளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் எடுத்துரைத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கட்சி நிர்வாகிகளுடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஸ்ரீதர்.
நாம் தமிழர் கட்சி - இரா.ஸ்ரீதர்
நாதக வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, சீமான் பிரச்சாரம் செய்துள்ளார். தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று, நிலத்தடி நீரில் ஏற்படும் மாசுவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், எளாவூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் குடிநீர், கழிவறை, கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன் நிழற்குடைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - எஸ்.விஜயகுமார்
தவெக வேட்பாளர் எஸ்.விஜயகுமார், தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வீதிதோறும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் எஸ்.விஜயகுமார்.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோடை வெயிலுக்கு இணையாக கட்சிகளின் தேர்தல் பரப்புரையும் அனல் பறக்கிறது.