சென்னை: வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட்டிருப்பதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் எந்த தேர்வும் புகார் இல்லாமல் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் தேர்வு இருந்து வருகிறது.
நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட் தேர்வில் முறைகேடு இல்லை, நீட் தேர்வே ஒரு முறைகேடு தான். ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்பட வேண்டும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்தினால் ஏற்படும் காலதாமதம், மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால், பழையபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் அரசும், நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிய எங்கள் திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக, அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயத்தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாக்கள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும், கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை.
இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன்: ஆண்டுதோறும் நீட் தேர்வில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. வணிக மயமான இந்த நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.