சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளிமுகமை மூலம் நடத்துநர்கள் நியமிப்பதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: திமுக அரசு, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல், ஒப்பந்த பணியாளர்களை ‘சால்வாட்’ என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது.
தவெக அரசு தற்போது எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற உத்தரபிரதேச நிறுவனம் மூலம் நடத்துநர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உ.பி. நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் நடத்துநர்களை நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும். எனவே உ.பி. நிறுவனத்துக்கு வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
இதுபோல் சிந்தூரி மேனேஜ்மென்ட் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துக்கு நிர்வாகப் பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர், ஓட்டுநர் போன்ற அடிப்படைப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தையே தனியார் மயமாக்குவதற்கான பாதையைத் திறக்கும் அபாயகரமான நடவடிக்கை ஆகும்.
ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள் பணிச்சுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் ஒப்பந்த முறையை விரிவுபடுத்துவது தொழிலாளர் நலனுக்கு எதிரானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கையை தொடர்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்: தேர்தலுக்கு முன் தனியார்மயத்துக்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றுவதுதான் முதல்வர் விஜய் சொன்ன மாற்றமா? ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தவெக அரசு துளியளவும் நடவடிக்கை எடுக்காதது, வேலைக்காக காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.