சென்னை: தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ‘தமிழ் கலாச்சாரம் நாட்டின் நாகரிக பயணத்தை செழுமையாக்கி உள்ளது’ எனத் தெரிவித்தார். இதேபோல் குடியரசுத் தலைவர், முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் உருவான நாளில் அப்பகுதி மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வளமான கலாச்சார பாரம்பரியமும், பன்முகத்தன்மை மரபுகளும் கொண்ட இந்த மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை உந்தி செலுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த மாநில மக்களின் நல்வாழ்வு செழிக்கட்டும்.
பிரதமர் மோடி: தொழில்முனைவோடும், கடின உழைப்புடனும் இந்தியாவின் வளர்ச்சிக்குமகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள தமிழக மக்களுக்கு
தமிழ்நாடு தினத்தில் மனம்நிறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் கலாச்சாரம் நாட்டின் நாகரிக பயணத்தை பல வழிகளில் செழுமையாக்கிஉள்ளது.
இந்நன்னாள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும், எதிர்காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அதன் நிறுவன நாளில், அங்குள்ள மக்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் வளமான கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியம் இந்தியாவின் ஆன்மாவை செதுக்கியுள்ளன. அவை தொடர்ந்து செழித்தோங்கவும், முன்னேறவும், ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க பங்காற்றவும் வேண்டுகிறேன்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: தமிழ்நாடு நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
முதல்வர் விஜய்: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழகம் உருவான இந்நாளில் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று சிறப்புமிக்க இந்நன்னாளில், தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பேணிக்காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளை தொடர்ந்து நிலைநிறுத்த உறுதியேற்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வீரத்திலும், அறிவிலும், கலை பண்பாட்டிலும், சமூக கல்வி, தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தமிழகம் அனைத்து துறைகளிலும் மேலும் பல உயரங்களை தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ ஓரணியாய் நின்று உழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைக் கலாச்சாரத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து, பெண்களின் பாதுகாப்பும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், சமச்சீரான தொழில்துறை வளர்ச்சி நிறைந்த ‘வளர்ந்த தமிழகம்’ படைக்க உறுதியேற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகம் உருவாக்கப்பட்ட நவ.1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘தமிழ்நாடு
நாள்’ கொண்டாடப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளையும் தமிழக அரசு கொண்டாட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: ‘தமிழ்நாடு நாள்’ எது என்பதிலேயே குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாமக வலியுறுத்தலை ஏற்று நவ. 1-ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருப்பதே நல்ல தொடக்கம்தான்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டையும் போற்றும் இந்நாளில், உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்.
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீ த லீடர்ஸ் தலைவர் கே.அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.