தமிழகம்

இலைக் கட்சியின் ‘அவார்டு’ மாவட்ட ‘அதிரடி’கள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘அவார்டு’ மாவட்ட இலைக் கட்சியின் முன்னாள் ‘அதிரடி’ மாண்புமிகுவானவர், மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் நான் தான் அத்தாரிட்டி என்பது போல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். கனிம வள கொள்ளையைக் கண்டித்து ‘அருவி’ மாவட்டத்தில் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ‘அதிரடி’ மாண்புமிகுவையே பொறுப்பாளராக அனுப்பி வைத்திருந்தார் எடக்கானவர்.

இதுதான் சாக்கு என்று அந்த சமயத்தில், ‘எடக்கானவரின் தென் மண்டலத் தளபதியே’ என ‘அதிரடி’ பார்ட்டிக்கு அதிரி புதிரியாய் போஸ்டர்களை அடித்து அதகளம் செய்தார்கள் அவரது அடிப்பொடிகள். அடுத்த டார்கெட்டாக ‘அவார்டு’ மாவட்டத்தின் அத்தனை தொகுதிகளுக்கும் தானே வேட்பாளர்களை தேர்வு செய்த ‘அதிரடி’ பார்ட்டி, அவர்களை எல்லாம் தேர்தல் வேலைகளை தொடங்கும்படியும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.

          

இதையெல்லாம் கேள்விப்பட்டு மிரண்ட எடக்கானவர் ‘அதிரடி’ பார்ட்டியை அழைத்து, “நீங்கள் உங்கள் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்... மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ‘அன்பாக’ சொல்லிவிட்டாராம்.

இதனால், அப்செட்டாகிப் போய் தனது மாவட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ‘அதிரடி’ பார்ட்டி, இப்போது சாதி சங்க தலைவர்களை வரிசையாக சென்னைக்கு அழைத்துச் சென்று எடக்கானவரைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வைத்து வருகிறாராம். இதன் மூலமாவது தனது மாவட்டத்துக்குள் தன்னை கோலோச்ச என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ‘அதிரடி’ பார்ட்டி.

SCROLL FOR NEXT