‘அம்மா’ பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்கத் தயாராகி வரும் சின்னம்மா, டெல்லியில் அதற்கான வேலைகளை வேகப்படுத்தி வருகிறாராம். ஒருவேளை, டெல்லியில் வேலைகள் தாமதமானால், சகோதரர் ஏற்கெனவே தொடங்கிவிட்டு சும்மா வைத்திருக்கும் ’கழகத்தையே’ தனது கட்சியாகப் பயன்படுத்துவாராம்.
மாம்பழக் கட்சி பெரியவர், இலைக் கட்சியின் முன்னாள் ‘பணிவு’ முதல்வர், சின்னம்மா என உதிரிகள் அத்தனை பேரையும் பனையூர் பக்கம் திருப்பிவிட ஒரு திட்டம் தயாராகிறதாம். இலைக் கட்சிக்குள் சின்னம்மா தரப்புக்கு இடமில்லை என்று சொல்லப்பட்டதால் முக்குலத்து சாதி, சனங்கள் அந்த ஆத்திரத்தில் சூரியக் கட்சி கூட்டணிக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக இப்படியொரு பிளான் ரெடியாகிறதாம்.
அதனால் தான் முதல் கூட்டத்துக்கான இடத்தையே முக்குலத்துச் சீமையில் தேர்வு செய்தார்களாம். அதற்கு முன்னதாக, ‘சின்னம்மா வந்துட்டாங்க...’ என்று பிரச்சாரப் பாடலையும் வெளியிட்டு வேகம் காட்டி இருக்கிறார்கள் சின்னம்மா தரப்பு ஆட்கள்.
இதன் பின்னணியில் டெல்லி ‘உள்துறை’ தலைவரின் கண்ணசைவும் இருப்பதாகச் சொல்லும் அவர்கள், “எல்லாரும் இப்ப நினைச்சுட்டு இருக்க எதுவுமே நடக்கப் போறதில்ல... தேர்தலுக்குப் பின்னாடி தாமரைக் கட்சி தமிழ்நாட்டுல என்னென்ன சித்து விளையாட்டுகளைக் காட்டப் போகுது பாருங்க.
அம்மா இறந்தப்ப, அடுத்த முதல்வர் நம்மதான்னு திடமா இருந்த சின்னம்மாவ எப்படி ஜெயிலுக்கு அனுப்பி வெச்சு எல்லாத்தையும் தலைகீழா மாத்துனாங்களோ... அதே மாதிரி பல பேரை ஜெயிலுக்கு அனுப்பவும் தயாரா இருக்கு தாமரைக் கட்சி” என்று கண்ணடிக்கிறார்கள்.