‘மலர்ச்சி' தலைவருக்கு ‘வெல்த்’ அவார்டுகளை வெகுமதியாய்த் தந்து, அவருக்கு வேட்டு வைத்து வரும் ‘சத்ய’ தலைவர் தனிக் கட்சி தொடங்கும் முன்னதாக அவரையும் சேர்த்து 13 பேர் மொத்தமாக ஆலயக் கட்சிக்கு வருவதாக அப்ளிகேஷன் போட்டார்களாம். இதில் 'மலர்ச்சி' கட்சியின் முன்னாள் இந்நாள் முதுபெரும் தலைவர்களும் இருந்தார்களாம்.
இவர்கள் சார்பில் ‘புலவர்’ தலைவர் ஒருவர் தனது தொகுதியைச் சேர்ந்த ‘பெரிய’ மீசை அமைச்சரிடம் முதலில் பேசினாராம். ஆனால், “இதெல்லாம் நம்மாள முடியாதுண்ணே...” என்று முறுக்கிக் கொண்ட ‘மீசை’, கரூர் பக்கம் கைகாட்டி விட்டாராம். அதன்படி புலவர் தரப்பு கரூருக்கே கார்பிடித்துப் போய் ‘திருப்பதி’ கம்பெனி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
அவரும் உடனடியாக இது குறித்து முதன்மையானவரின் உதவியாளருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினாராம். அடுத்த இரண்டு நாளில் சந்திப்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், இந்தத் தகவல் எப்படியோ ‘மலர்ச்சி’ தலைவரின் காதுகளை எட்டிவிட்டதாம்.
உடனே, ஆளுக்கு முந்தி அவர் போய் ’ஆலய’ வாசலில் நின்று முதன்மையானவரைச் சந்தித்து முனகிக் தீர்த்து விட்டாராம். இதையடுத்தே, ‘ஆலய’ப் பிரவேசத்தை ஒத்திவைத்து விட்டு தனியாக ‘இயக்கம்’ எடுத்தாராம் ‘சத்ய’ தலைவர். ‘மலர்ச்சி’ தலைவரை “நீங்கள் எல்லாம் ஓல்டு ஸ்கூல் ஆஃப் தாட்ஸ்” என்று சொல்லி மட்டம் தட்டி வரும் அவரது சீமந்த புத்திரர் இம்முறை எப்படியும் அவரை ஆலயக் கட்சி கூட்டணியில் இருக்கவிட மாட்டார்.
அப்படியொரு நிலை வந்து அப்பாவும் பிள்ளையும் வெளியேறும் போது தங்களுக்கு ஒரு ’மறுமலர்ச்சி’ கிடைக்கலாம் என மனக் கோட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறாராம் ‘சத்ய’ தலைவர்.
இதனிடையே, அவர் தொடங்கி இருக்கும் கட்சியின் பெயரும் பனையூர் பார்ட்டியின் பெயரும் ஆங்கிலச் சுருக்கத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வருவதை வைத்து, ‘ஹீரோ தலைவரை கலாய்க்க ஆலயக் கட்சியினர் தான் இப்படியொரு யோசனையைக் கொடுத்திருக்கிறார்கள்’ என்றும் சிலர் கொளுத்திப் போடுகிறார்களாம்.