குக்கர் கட்சியில் இருந்த ‘நாச்சியார்’ பெண்மணி கூடல் மாநகர் மாவட்டத்தில் இருக்கும் ‘மங்கலமான’ தொகுதியில் போட்டியிட தீர்மானித்து அங்கே தேர்தல் வேலைகளை எல்லாம் தொடங்கி விட்டாராம். எல்லாம் குக்கர் தலைவரின் பேச்சை நம்பித்தான்.
ஆனால், “எக்காலத்திலும் எடக்கானவருடன் கூட்டணி இல்லை” எனச் சொல்லி வந்த ‘குக்கர் பார்ட்டி’, திடீரென, “பங்காளிங்க நாங்க... எங்களுக்குள்ள அடிச்சுக்குவோம் புடிச்சுக்குவோம்” என்பது போல் சொல்லி இலைக் கூட்டணியில் பந்திக்கு முந்திவிட்டார். இதனால் ‘நாச்சியார்’ ஏக கடுப்பாகி விட்டாராம். காரணம், அவர் களப்பணி செய்து வைத்திருந்த ‘மங்கலம்’ தொகுதி இலைக் கட்சியின் ‘உதயமான’ முன்னாள் மாண்புமிகுவின் சிட்டிங் தொகுதி.
இலைக் கூட்டணியில் இருந்தால் அந்தத் தொகுதி தனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிந்து போனதால் தான் குக்கர் தலைவரோடு கோபித்துக் கொண்டு ‘சித்தி’ அம்மாவைப் போய் பார்த்தாராம்.
இது தெரிந்ததுமே ‘கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தி விட்டதாக(!)’ சொல்லி அவரை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார் குக்கர் தலைவர். இதையடுத்து, “அந்தப் பொண்ணு ‘சித்தி’ அம்மாவைத் தானே பார்த்து பூங்கொத்து குடுத்துச்சு... இதுல என்ன ‘கழகத்துக்கு கண்ணிய மாசு’ வந்துச்சு” என குக்கர் கட்சிக்குள்ளேயே பலரும் குபீர் சிரிப்பு சிரிக்கிறார்கள்.
இலைக் கட்சியை மீட்டெடுக்கப் போவதாகச் சொல்லி வரும் ‘சித்தி’ அம்மா, இந்த முறை எப்படியும் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தல் களத்துக்கு வருவார். அந்த சமயத்தில் ‘மங்கலம்’ தொகுதியைக் கேட்டு வாங்கி போட்டியிடலாம் என்ற தொலை நோக்குச் சிந்தனையும் ‘நாச்சியார்’ பெண்மணி குக்கர் தலைவருக்கு குட்பை சொன்னதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.